Showing posts with label சார்பெழுத்துகள். Show all posts
Showing posts with label சார்பெழுத்துகள். Show all posts

Sunday, 4 December 2016

அளபெடை

தாம் கொண்ட ஓசையளவை விடக் குறைந்து ஒலிக்கும் எழுத்துகளான குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி இதுவரை கண்டோம். இனி, பாட்டிலோ உரையிலோ, ஓசை குறைந்த இடங்களில், அல்லது, ஓசை இனிமை வேண்டி, அல்லது, பெயரை வினையாக ஆக்க, சில உயிரெழுத்துகளும் ஒற்று எழுத்துகளும் (மெய் எழுத்துகள்), தம் மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அவ்வுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் ஒற்றெழுத்துக்கு ஒற்றளபெடை என்றும் பெயராம் என்க.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
இக்குறளில் உள்ள ஓ எனும் நெடில் தனக்குரிய அளவான இரண்டு மாத்திரை அளவுக்கு ஒலிக்காது, நீண்டு, மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதாக உள்ளது காண்க. இதுவே உயிரளெபடை ஆகும்.

இங்கு ஓஒ என்பதில் முதலில் உள்ள ஓகார நெடிலை மட்டுமே நீட்டி ஒலித்தல் வேண்டும் என்றும், அதன் பின் உள்ள ஒகரம் என்பது அளபெடைக்கான குறியீடு மட்டுமே என்றும், அந்த ஒகரம் எனும் எழுத்தை ஒலித்தல் கூடாது என்றும் மனத்தில் இருத்துக.

இதே போல, இரண்டாம் அடியில் உள்ள 'தாஅம்' என்பதில் உள்ள தா எனும் உயிர்மெய்யெழுத்தின் ஆகாரம் மூன்று மாத்திரை அளவு நீண்டு ஒலிப்பதாகும் என்க. இங்குள்ள ஓஒ மற்றும் தாஅ இரண்டும் உயிரளபெடைகளாம் என்க. இவ்வளபெடைகளை அறிவிக்கும் குறியீடுகளாக, அளபெடுக்கும் நெடிலின் இனமான குறிலெழுத்து எழுதப்படும் என்க.
ஓஒ
தாஅ
என்றவாறு. இக்குறியீடுகளை ஒலித்தல் கூடாது. இக்குறியீடுகளின் அளவுக்கு முன்னுள்ள எழுத்தை நீட்டி ஒலிக்க வேண்டுமென்க. சில வேளை, குறில் நெடிலாகிப் பின்னர் அளபெடுக்கும்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
இக்குறளில் அறளழீஇ புறனழீஇ என்பவற்றுள், அறனழி புறனழி என்ற இயல்பான சொற்களில் உள்ள ழி எனும் உயிர்மெய்க்குள் உள்ள இகரம், தன் அளவான ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது, நெடிலாகிப்பின் நீண்டு அளபெடுத்து, மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதைக் காண்க.
ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையினும் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.
எ-டு.
சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்ந்த.

குற்றியலிகரம்

உகரம் குறுகி அரைமாத்திரை ஒலித்துக் குற்றியலுகரமாதல் போல, இகரமும் குறுகி, குற்றியலிகரமாக, சிலவிடங்களில் அரைமாத்திரை ஒலிக்கும் என்க. குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை அடுத்து, யா எனும் யகர உயிர்மெய்யில் தொடங்கும் சொற்கள் வந்தால், நிலைமொழி முன்னால் நிற்கும் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரியும் என்க.

காட்டு:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
                                          - திருவள்ளுவர்.

இங்கு 'எனப்படுவது' எனும் சொல்லின் ஈற்றெழுத்தான உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமன்றோ. அதனை அடுத்து, யாதெனின் எனும் யகர மெய் வந்ததால்.

"எனப்படுவ தியாதெனின்" எனத் திரிந்து,
'தியாதெனின்' எனும் சீரின் முதல் இகரம், அரை மாத்திரை ஒலிக்கும் குற்றியலிகரமாக ஆகுமென்க. இதுவே குற்றியலிகரம் எனும் சார்பெழுத்து பிறக்கும் வழியாம் என்க.

குற்றியலுகரம்

 உகரம் ஒரு மாத்திரை உடையது. உகர உயிர் ஏறிய உயிர்மெய்களுக்கும் மாத்திரை ஒன்றே. புதை என்ற சொல்லின் முதலில் உள்ள பு எனும் உகர உயிர்மெய்யும்; உரு எனும் சொல்லில் முதலில் உள்ள உகர உயிரும், இறுதியில் ரு எனும் உகர உயிர்மெய்யும்; தொடுகை எனும் சொல்லில் உள்ள டு எனும் உகர உயிர்மெய்யும்;இவை எல்லாம் ஒரு மாத்திரை ஒலிப்பனவே என்பதைப் பலுக்கிப் பார்த்து உணர்க. (பலுக்கி - உச்சரித்து)
ஆனால்,
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
என்ற பாட்டில் ஆடு என்பதிலுள்ள டு எனும் எழுத்தை, ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறோமா... அவ்வாறு ஒலிப்பாரைப் பார்த்து நகைப்போம் இல்லையா..

இவ்வாறு சில வேளை, சில இடங்களில், உகரமானது ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது, குறுகி, அரை மாத்திரையே ஒலிக்கும், தமிழின் தனிச்சிறப்பே, குற்றியலுகரமாகும் என்க.
இனி, இவ்வாறு எந்த எந்த இடத்தில் எந்த எந்த உகரம் குறுகி ஒலிக்கும் என்பதற்குத் தமிழில் தெளிவான வரையறை உண்டு என்றறிக.

அவையாவன,
  1. வல்லின மெய்களில் ஏறிய உகரமே இவ்வாறு குறுகும் என்க. அதாவது, கு சு டு து பு று என்ற ஆறு மட்டுமே குற்றியலுகரங்களாய் வரும் தகுதி கொண்டவை என்க.
  2. அவ் வல்லின உகரங்கள் சொல்லின் ஈற்றெழுத்தாக (கடைசி எழுத்தாக), வரும் பொழுதே குறுகி ஒலிக்கும் என்க.
  3. அதுவும் தனிக்குறிலை அடுத்து வந்தால் குறுகாது என்றறிக. (குறு, மெது, அது...)

மேற்கண்ட மூன்று வரையறைகளைக் கொண்டு குற்றியலுகரங்களைக் கண்டு கொள்ள வேண்டும் என்க. இவை தமிழர்களாகிய நமக்குப், பேசும்போது, இயல்பாகவே வந்துவிடுவதாகும். எழுதும்போது இனங்கண்டு கொள்ளும் வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்றுமறிக. அதாவது
  1. கு சு டு து பு று எனும் எழுத்துகளே குற்றியலுகரமாக வரக்கூடியவை...
  2. அவையும் சொல்லின் ஈற்றெழுத்தாக வரும் போது மட்டுமே, குறுகி, 'குற்று இயல் உகர'மாகும். மற்ற வேளையில் 'முற்று இயல் உகர"மாகவே நின்று ஒரு மாத்திரை ஒலிக்கும்.
  3. அவ்வாறு சொல்லின் ஈற்றெழுத்தாக வரும்போது இரண்டெழுத்துச் சொல்லானால், தனிக்குறிலை அடுத்து வந்தால் குற்றியலுகரமாகாது.
எடுத்துக்காட்டு :- தடு, பொறு, எடு, படு.

எனவே, இரண்டெழுத்துச் சொற்களில், நெடிலையடுத்து வரும் குசுடுதுபுறுக்கள் குற்றியலுகரங்களாகும் என்க. இவை நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:- ஏகு, பேசு, போடு, ஊது, ஆறு..

(தமிழில் மெய்யெழுத்துகளை முதலாகக் கொண்டு எந்த சொல்லும் தொடங்காது என்பதால், இரண்டெழுத்துச் சொற்கள் குறிலைக் கொண்டோ நெடிலைக் கொண்டோதான் தொடங்க வேண்டும் என்றறிக)
இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட சொற்களின் இறுதி எழுத்தாக 'குசுடுதுபுறு'க்கள் வரும்போது குற்றியலுகரங்களாகும் என்க.

எடுத்துக்காட்டு:-
பத்து, பகட்டு, படிக்கட்டு
பந்து, பறந்து, மகிழுந்து
கொய்து, வலநேர்பு, அப்போழ்து
அஃது, கஃசு, எஃகு
பொழுது, விளையாடு, குறளமுது

இவையனைத்தும் குற்றியலுகரங்களால் முடியும் சொற்களாம. இச்சொற்களின் ஈற்று உகரமே குற்றியலுகரமாம். அவ்வுயிர்மெய்யுகரம் எதனை அடுத்து வருகின்றதோ அதன்வழி பெயர் பெறும் என்க...

  • பத்து, பகட்டு, படிக்கட்டு - வல்லின மெய்களை அடுத்து வந்தமையால் இவை வன்றொடர்க் குற்றியலுகரத்தில முடியும் சொற்கள்.
  • பந்து, பறந்து, மகிழுந்து - மெல்லின மெய்களை அடுத்து வந்தமையால் இவை மென்றொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொற்கள்.
  • கொய்து, வலநேர்பு, அப்போழ்து - - இடையின மெய்களை அடுத்து வந்தமையால் இவை இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில முடியும் சொற்கள்.
  • அஃது, கஃசு, எஃகு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்.
  • பொழுது, விளையாடு, குறளமுது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
 
இதுவரை, குற்றியலுகரம் எனும் சார்பெழுத்து என்னவென்று கண்டோம். பண்டைக் காலங்களில், குற்றியலுகரங்கள், மெய்யெழுததுகளைப் போல மேலே புள்ளியோடு எழுதப்பட்டன என்றறிக. சோம்பலாலோ, பிற காரணங்களாலோ இம்முறை ஒழிந்ததென்க.

இன்றும், பாட்டெழுதிப் பழகும் பாவலர்கள் இம்முறையைப் பேணி எழுதிப் பழகின், நல்ல பயிற்சியாய் ஆகுமென்க.
 

சார்பெழுத்துகள்

முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
  1. உயிர்மெய் எழுத்து
  2. ஆய்த எழுத்து
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஔகாரக் குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும்.