Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

Monday, 5 December 2016

நெடுங்கணக்கு

உயிர்

அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ

ஒ ஓ

மெய்

க் ங்
ச் ஞ்
ட் ண்
த் ந்
ப் ம்
ய் ர் ல் வ் ழ் ள்
ற் ன்

உயிர்மெய்

க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங  .  .  .   .   .
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ .  .  .  .  .  .   .   .
.
.
.
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்தம்


நெடுங்கணக்கு வைப்புமுறை


சிறப்பினாலும் இனத்தினாலும் ஆன முறைப்படி வைக்கப்பட்டதே தமிழ் நெடுங்கணக்கு ஆகும்.
முதல் எழுத்துகளான உயிரும் மெய்யும் ஆன முப்பதும் முதலில் வைக்கப்பட்டன.
அவற்றுள், தனித்து இயங்கும் சிறப்பு கொண்டதனால் முதலில் உயிர் எழுத்துகள் வைக்கப்பட்டன. அச்சிறப்பில்லா மெய்கள் அவற்றின் கீழே வைக்கப்பட்டன.

 

உயிர் எழுத்துகள் வைப்பு முறை:

அவ்வுயிர்களுள், அங்காத்தல் அதாவது வாயைத் திறத்தலால் உருவாகும் சிறப்பினதான அகரம் எல்லாவற்றுக்கும் முதன்மையாக வைக்கப்பட்டன.
அகர முதல வெழுத்தெல்லாம்
என்று வள்ளுவர் இதையே வழிமொழிவார்.
அடிப்படை உயிர்களான அ இ உ என்பன முதலில் வைக்கப்பட்டதன் காரணம் அவை பிறக்கும் முறைமையினால் என்க. (பிறக்கும் முறைமை என்றால் அவ்வொலிகளை நாம் எந்தெந்த உறுப்புகளின் முயற்சி கொண்டு பலுக்குகிறோம் என்பதே என்க)

அகரம் என்பது அங்காந்து கூறும் முயற்சியாலும், இகரம் என்பது அவ்வங்காப்போடு அண்பல்லில் அடிநாக்கு விளிம்பு உறுவதாலான முயற்சியாலும், உகரம் என்பது அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியாலும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.

ஆகார ஈகார ஊகாரங்கள், அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன.
முறை:

இனத்தினால் குறில்களுக்குப் பின் அவற்றின் இனமான நெடில்கள் வைக்கப்பட்டன.
அகரத்திற்கு ஆகாரம் இனம்
எகரத்திற்கு ஏகாரம் இனம்
ஒகரத்திற்கு ஓகாரம் இனம்.
அதன்படியே வைக்கப்பட்டன.

ஒரே இடத்தில் பிறந்த எழுத்துகள், ஒரே இனமாகக் கொள்ளப்பட்டன.

இன எழுத்துகள் - மெய்
க - ங
ச - ஞ
ட - ண
த - ந
ப - ம
ற - ன
என்பவை இன எழுத்துகள் என்று கண்டோம். இவற்றைச் சொல்லிப் பார்த்து இவை இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கும் உண்மையைக் கண்டு கொள்க.

 

 மெய் எழுத்துகளின் வைப்புமுறை

வலியவர் மெலியவருக்குப் பின்னே செல்வது போல வலிமைச் சிறப்பினால் க ச ட த ப ற எனும் வல்லின மெய்கள் முன்னாலும், அவற்றின் இன எழுத்துகளான ங ஞ ண ந ம ன ஆகிய மெல்லின எழுத்துகள் அவற்றின் பின்னாலும் முறையே வைக்கப்பட்டன. இடையினம் ஆறும் ஒரே இனமாதலால் அவை ஆறும் வரிசையாக ய ர ல வ ழ ள என்று வைக்கப்பட்டன. ஆனாலும், அவற்றைத் தனியே தொங்க விடக் கூடாது என்பதால், வல்லின மெல்லின இணையான 'ற ன' என்பதை அவற்றின் பின்னர் வைத்து, மெய் எழுத்துகளின் வைப்பு முறை அமைக்கப்பட்டது.

இதுவே சிறப்பினாலும் இனத்தினாலும் வைக்கப்பட்ட முறைமை ஆகும்.

இறுதி நிலை

இறுதி நிலை - சொல்லின் ஈற்றில் நிற்கும் எழுத்துகள்

எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினோரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துகளும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துகளாம்.

எ-டு.
விள,    பலா,     கிளி,    தீ,
கடு,       பூ,       சே,     கை,    நொ, 
போ,    வெள,   உரிஞ்,   மண்,
வெரிந்,  மரம்,   பொன்,  காய்,
வேர்,    வேல்,    தெவ்,  யாழ்,   வாள்.

இதனால், எந்த வல்லின மெய்யும், மொழிக்கு இறுதியில் நிற்காது என்பதை உணர்க.
அசோக், கிரீச், பிசரட், பிரசாந்த், பிரதாப் என்பன போன்றவை தமிழாகா என்றறிக.
இவற்றைப் பலுக்கிப் பார்த்து இவை விலக்கப்பட்டமை ஏன் என்றும் உணர்க.

இடைநிலை


இடைநிலை என்றால் என்ன?
அதாவது, ஒரு சொல்லுக்குள், எந்தெந்த எழுத்துகளை அடுத்து எந்தெந்த எழுத்துகள் வரக்கூடாது என்பதே இடைநிலையாம். இதன் சில நெறிகளைக் காண்போம்.

இடைநிலை நெறி 1:

வல்லின மெய்க்குப் பின் வேறு எந்த மெய்யும் வராது வராது வராது. க் ச் ட் த் ப் ற் எனும் ஆறு மெய்யெழுத்துகள் வல்லின மெய்களாகும். இவற்றை அடுத்து எந்த மெய் எழுத்தும் வராது என்க... உயிர்மெய்களே வருமென்க.
பயிற்ச்சி, புரட்ச்சி
 என்பன போன்ற பிழைகளை இந்நெறியின் வழி திருத்திக் கொள்ளலாம்.

இடைநிலை நெறி 2:

கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும். அதாவது, க், ச், த், ப் எனும் மெய் எழுத்துகளின் பின் அம்மெய்கள் கொண்ட உயிர்மெய்கள் மட்டுமே வரும். பிற உயிரமெய்கள் வாரா.
எ-டு: அக்கை, உச்சி, மெத்தை, உப்பு...

இடைநிலை நெறி 3:

ர, ழ என்ற இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும். ரகர ழகர மெய்கள், ரகர ழகர உயிர்மெய்களோடு சேரா. பிற உயிர்மெய்களோடு மட்டுமே சேரும்.

எ-டு: கூர்மரம், வாழ்நிலம்...

ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். க, ச, த, ப, ர, ழ ஆகிய ஆறனைத் தவிர மற்ற மெய் எழுத்துகள் அதே மெய் கொண்ட உயிர்மெய்யோடு பிற உயிர்மெய்யோடும் வரும்.
எ-டு:
என்னை/என்று; அம்மா/அம்பு; என்பன போன்று.

இடைநிலை நெறி 4:

தனிக்குறிலை அடுத்து ரகர மெய்யும் ழகர மெய்யும் நிற்காது. நிற்காது என்று சொல்லப்பட்ட நெறியை மீறி நிற்பவை தமிழல்ல என்க.
எ-டு : அர்ச்சனை, கர்ப்பம் போன்ற பல வடமொழிகளை களைய இந்நெறி உதவும்.
மற்ற இடைநிலை நெறிகளைத், தக்க இலக்கண நூல்களுள் கண்டு கொள்க. நன்றி

முதனிலை

பன்னிரண்டு உயிரெழுத்துகளும், உயிரேறிய க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகளாகும். மற்றவை மொழிக்கு முதலில் வாரா...

எ-டு.

அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சான்று, ஞாயிறு, நன்மை, பூ, மணி, யாழ், வயல்.
எந்த மெய்யெழுத்திலும், எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
ங, ட, ண, ர,ல, ழ, ள, ற, ன 
என்ற வரிசை உயிர்மெய்களைக் கொண்டு, எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
இவைகளுள்ளே,

க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
  1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேள்வி, கை, கொண்டு, கோடை, கௌவை.
  2.  சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரை, செக்கு, சேவல், சைவம், சொன்றி, சோறு,
  3.  தகை, தார், திரை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேடல், தையல், தொண்டு, தோடு, தௌவை.
  4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌவி.
  5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
  6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேடு, மையல், மொட்டு, மோனை, மௌவல்.

வகரமெய்

 வகரமெய் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

யகரமெய் 

யகரமெய் ஆகாரத்தை கொண்டே பெரும்பாலும் முதலாகி வரும். 
யாழ், யாறு, யாது, யாக்கை, யானை.
ஆயினும் யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும் என்பது நன்னூல்.
 

ஞகரமெய்

ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

Sunday, 4 December 2016

குற்றியலிகரம்

உகரம் குறுகி அரைமாத்திரை ஒலித்துக் குற்றியலுகரமாதல் போல, இகரமும் குறுகி, குற்றியலிகரமாக, சிலவிடங்களில் அரைமாத்திரை ஒலிக்கும் என்க. குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை அடுத்து, யா எனும் யகர உயிர்மெய்யில் தொடங்கும் சொற்கள் வந்தால், நிலைமொழி முன்னால் நிற்கும் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரியும் என்க.

காட்டு:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
                                          - திருவள்ளுவர்.

இங்கு 'எனப்படுவது' எனும் சொல்லின் ஈற்றெழுத்தான உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமன்றோ. அதனை அடுத்து, யாதெனின் எனும் யகர மெய் வந்ததால்.

"எனப்படுவ தியாதெனின்" எனத் திரிந்து,
'தியாதெனின்' எனும் சீரின் முதல் இகரம், அரை மாத்திரை ஒலிக்கும் குற்றியலிகரமாக ஆகுமென்க. இதுவே குற்றியலிகரம் எனும் சார்பெழுத்து பிறக்கும் வழியாம் என்க.

குற்றியலுகரம்

 உகரம் ஒரு மாத்திரை உடையது. உகர உயிர் ஏறிய உயிர்மெய்களுக்கும் மாத்திரை ஒன்றே. புதை என்ற சொல்லின் முதலில் உள்ள பு எனும் உகர உயிர்மெய்யும்; உரு எனும் சொல்லில் முதலில் உள்ள உகர உயிரும், இறுதியில் ரு எனும் உகர உயிர்மெய்யும்; தொடுகை எனும் சொல்லில் உள்ள டு எனும் உகர உயிர்மெய்யும்;இவை எல்லாம் ஒரு மாத்திரை ஒலிப்பனவே என்பதைப் பலுக்கிப் பார்த்து உணர்க. (பலுக்கி - உச்சரித்து)
ஆனால்,
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
என்ற பாட்டில் ஆடு என்பதிலுள்ள டு எனும் எழுத்தை, ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறோமா... அவ்வாறு ஒலிப்பாரைப் பார்த்து நகைப்போம் இல்லையா..

இவ்வாறு சில வேளை, சில இடங்களில், உகரமானது ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது, குறுகி, அரை மாத்திரையே ஒலிக்கும், தமிழின் தனிச்சிறப்பே, குற்றியலுகரமாகும் என்க.
இனி, இவ்வாறு எந்த எந்த இடத்தில் எந்த எந்த உகரம் குறுகி ஒலிக்கும் என்பதற்குத் தமிழில் தெளிவான வரையறை உண்டு என்றறிக.

அவையாவன,
  1. வல்லின மெய்களில் ஏறிய உகரமே இவ்வாறு குறுகும் என்க. அதாவது, கு சு டு து பு று என்ற ஆறு மட்டுமே குற்றியலுகரங்களாய் வரும் தகுதி கொண்டவை என்க.
  2. அவ் வல்லின உகரங்கள் சொல்லின் ஈற்றெழுத்தாக (கடைசி எழுத்தாக), வரும் பொழுதே குறுகி ஒலிக்கும் என்க.
  3. அதுவும் தனிக்குறிலை அடுத்து வந்தால் குறுகாது என்றறிக. (குறு, மெது, அது...)

மேற்கண்ட மூன்று வரையறைகளைக் கொண்டு குற்றியலுகரங்களைக் கண்டு கொள்ள வேண்டும் என்க. இவை தமிழர்களாகிய நமக்குப், பேசும்போது, இயல்பாகவே வந்துவிடுவதாகும். எழுதும்போது இனங்கண்டு கொள்ளும் வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்றுமறிக. அதாவது
  1. கு சு டு து பு று எனும் எழுத்துகளே குற்றியலுகரமாக வரக்கூடியவை...
  2. அவையும் சொல்லின் ஈற்றெழுத்தாக வரும் போது மட்டுமே, குறுகி, 'குற்று இயல் உகர'மாகும். மற்ற வேளையில் 'முற்று இயல் உகர"மாகவே நின்று ஒரு மாத்திரை ஒலிக்கும்.
  3. அவ்வாறு சொல்லின் ஈற்றெழுத்தாக வரும்போது இரண்டெழுத்துச் சொல்லானால், தனிக்குறிலை அடுத்து வந்தால் குற்றியலுகரமாகாது.
எடுத்துக்காட்டு :- தடு, பொறு, எடு, படு.

எனவே, இரண்டெழுத்துச் சொற்களில், நெடிலையடுத்து வரும் குசுடுதுபுறுக்கள் குற்றியலுகரங்களாகும் என்க. இவை நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:- ஏகு, பேசு, போடு, ஊது, ஆறு..

(தமிழில் மெய்யெழுத்துகளை முதலாகக் கொண்டு எந்த சொல்லும் தொடங்காது என்பதால், இரண்டெழுத்துச் சொற்கள் குறிலைக் கொண்டோ நெடிலைக் கொண்டோதான் தொடங்க வேண்டும் என்றறிக)
இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட சொற்களின் இறுதி எழுத்தாக 'குசுடுதுபுறு'க்கள் வரும்போது குற்றியலுகரங்களாகும் என்க.

எடுத்துக்காட்டு:-
பத்து, பகட்டு, படிக்கட்டு
பந்து, பறந்து, மகிழுந்து
கொய்து, வலநேர்பு, அப்போழ்து
அஃது, கஃசு, எஃகு
பொழுது, விளையாடு, குறளமுது

இவையனைத்தும் குற்றியலுகரங்களால் முடியும் சொற்களாம. இச்சொற்களின் ஈற்று உகரமே குற்றியலுகரமாம். அவ்வுயிர்மெய்யுகரம் எதனை அடுத்து வருகின்றதோ அதன்வழி பெயர் பெறும் என்க...

  • பத்து, பகட்டு, படிக்கட்டு - வல்லின மெய்களை அடுத்து வந்தமையால் இவை வன்றொடர்க் குற்றியலுகரத்தில முடியும் சொற்கள்.
  • பந்து, பறந்து, மகிழுந்து - மெல்லின மெய்களை அடுத்து வந்தமையால் இவை மென்றொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொற்கள்.
  • கொய்து, வலநேர்பு, அப்போழ்து - - இடையின மெய்களை அடுத்து வந்தமையால் இவை இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில முடியும் சொற்கள்.
  • அஃது, கஃசு, எஃகு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்.
  • பொழுது, விளையாடு, குறளமுது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
 
இதுவரை, குற்றியலுகரம் எனும் சார்பெழுத்து என்னவென்று கண்டோம். பண்டைக் காலங்களில், குற்றியலுகரங்கள், மெய்யெழுததுகளைப் போல மேலே புள்ளியோடு எழுதப்பட்டன என்றறிக. சோம்பலாலோ, பிற காரணங்களாலோ இம்முறை ஒழிந்ததென்க.

இன்றும், பாட்டெழுதிப் பழகும் பாவலர்கள் இம்முறையைப் பேணி எழுதிப் பழகின், நல்ல பயிற்சியாய் ஆகுமென்க.
 

ஆய்த எழுத்து

ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஒரு எழுத்து ஆகும்.

எ-டு. எஃகு, கஃசு, அஃது, பஃறி

இனி, ஆய்த எழுத்தானது சார்பெழுத்து என்று அறிந்தும்,

உயிர், மெய்,
உயிர்மெய்,
ஆய்தம்

என்பதே முறை என்று அறிந்தும்,
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ 

என்று ஆய்தத்தை உயிரோடு சேர்த்துச் சொல்வது குழந்தைகளைக் குழப்பும் பெரும் பிழை என்று அறிக.

உயிர்மெய் எழுத்துகள்

உயிர் ஏறிய மெய்களே உயிர்மெய்களாம். அவை குறில் நெடில் என்றும், வல்லின மெல்லின இடையினமாயும் வகைப்படுத்தப்படும். உயிர் மெய்யெழுத்துகளாவன, பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு;
உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு;
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு,
உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு,
உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு,
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
 

சார்பெழுத்துகள்

முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.
  1. உயிர்மெய் எழுத்து
  2. ஆய்த எழுத்து
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஔகாரக் குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும்.

Saturday, 26 November 2016

மாத்திரை

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று,
நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை ஒன்று;
உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரை என்பது எழுத்தை ஒலிக்கும் கால நேரத்தை வரையறை செய்யும் கருவியாகும்.
இயல்பாக, மேற்சொன்ன மாத்திரை அளவில் ஒலிக்கும் எழுத்துகள், பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், அராகத்திலும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் ஆக முப்பதே தமிழின் முதல் எழுத்துகள் என்று கண்டோம். இந்த முப்பது ஒலிகளை வைத்து மட்டுமே இயங்குவதே நம் தாய்மொழியான தமிழ் என்க.

எழுத்திலக்கணம்: இனவெழுத்துகள்

இன வெழுத்து என்றால் என்ன:
ஒரே இடத்திலும் ஒரே போன்ற முயற்சியாலும் பிறந்த எழுத்துகள், இனவெழுத்துகளாம்
அகரத்துக்கு ஆகாரமும்,
இகரத்துக்கு ஈகாரமும்,
ஒகரத்துக்கு ஓகாரமும்,
உகரத்துக்கு ஊகாரமும்,
எகரத்துக்கு ஏகாரமும்,
ஐகாரத்துக்கு இகரமும்,
ஒகரத்துக்கு ஓகாரமும்,
ஒளகாரத்துக்கு உகரமும்,
ககரத்துக்கு ஙகரமும்,
சகரத்துக்கு ஞகரமும்,
டகரத்துக்கு ணகரமும்,
தகரத்துக்கு நகரமும்,
பகரத்துக்கு மகரமும்,
றகரத்துக்கு னகரமும்,
இன வெழுத்துக்களாம்.

இடையெழுத்தாறும், ஓரினமாகும்.
ககரத்துக்கு ஙகரமும், (அங்கு, பொங்கு)
சகரத்துக்கு ஞகரமும், ( மஞ்சள், பிஞ்சு)
டகரத்துக்கு ணகரமும், (கண்ட, உண்ட)
தகரத்துக்கு நகரமும், (அந்த, இந்த)
பகரத்துக்கு மகரமும், (வம்பன், அம்பு)
றகரத்துக்கு னகரமும், (மன்றம், கொன்று)
இவற்றை அக்காள் தங்கை என்று நினைத்துக் கொள்க...

ன் - வருமா, ண் - வருமா, ந் - வருமா என்ற குழப்பங்கள் வரும்போது, அக்காள் தங்கை என்ற நினைவு பயன்படும்.
 

எழுத்திலக்கணம்: உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகள்
தமிழ் உயிர்மெய் எழுத்துகள் பட்டியல்
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

எடுத்துக்காட்டு
கீழேயுள்ள அட்டவணையின் மெய்யெழுத்து "க்" உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய்யாகும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.

அமைப்பு உயிர்மெய் வடிவம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ

எழுத்திலக்கணம்: எழுத்துகள்

உயிரெழுத்துகள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துகளும் ஆகும். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----
உயிரெழுத்துகள், குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), என இரண்டு வகைப்படும்.
-----
குற்றெழுத்துகள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----
நெட்டெழுத்துகள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டு எழுத்துகளும் ஆகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----
வல்லெழுத்துகள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----
மெல்லெழுத்துகள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----
இடையெழுத்துகள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
----
உயிர் எழுத்துகளுக்கு 'உயிர்' என்றும் மெய் எழுத்துகளுக்கு 'மெய்' என்றும் 'உடம்பு' என்றும் தமிழர் பெயர் கொடுத்தது ஏன்?
உயிர் இனங்கள் அனைத்தும் உடல், உயிர் ஆகிய இரண்டையும் கொண்டு விளங்குகின்றன. உயிருள்ள உடலையும் உயிர் இல்லாத உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகின்றது.

இதனால்,
  1. உயிர்
  2. உடல்
  3. உயிரும் உடலும் இணைந்த உயிரினம்

ஆகிய மூன்றையும் நம்மால் தனித்தனியாகப் பிரித்து அறிய முடிகின்றது. இந்தப் பிரிவின்படி தமிழ் எழுத்துகள், உயிர், மெய் (உடல்), உயிர்மெய் என்று பிரிக்கப்பட்டு
  1. உயிர் எழுத்து
  2. மெய் எழுத்து
  3. உயிர்மெய் எழுத்து
என்று குறிக்கப்படும் பாங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது ஆகும்.
க், ங், ச், ஞ், என்ற உயிர்மெய்களை உயிர் எழுத்துகளின் உதவியின்றி சொல்லவே முடியாது.
க் என்பதை, 'இக்கு' என்று நாம் சொல்லும்போதும், இகர உயிரையும் உகர உயிரையும் சேர்த்தே பலுக்குவதைக் காண்க.

இதனால் இவை உடம்பு எனவும் மெய் எனவும் அழைக்கப்பட்டன.
உயிர் ஏறிய மெய்கள் உயிர்மெய்களாகும். உயிர்மெய் என்பது, பிராணி என்ற அயற்சொல்லால் அழிக்கப்படும் முன், அந்தப் பொருளில் வழங்கி வந்த ஒன்றே ஆகும்.
உயிர் மெய்யெழுத்துகளாவன. பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
  • உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு;
  • உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு;
  • ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
  • உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு,
  • உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு,
  • உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு,
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----
உயிர்மெய் என்பது உயிர் ஏறிய மெய் என்க...

க் + அ = க.
அ + க் = அக்