Showing posts with label சொற்கள். Show all posts
Showing posts with label சொற்கள். Show all posts

Monday, 5 December 2016

இறுதி நிலை

இறுதி நிலை - சொல்லின் ஈற்றில் நிற்கும் எழுத்துகள்

எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினோரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துகளும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துகளாம்.

எ-டு.
விள,    பலா,     கிளி,    தீ,
கடு,       பூ,       சே,     கை,    நொ, 
போ,    வெள,   உரிஞ்,   மண்,
வெரிந்,  மரம்,   பொன்,  காய்,
வேர்,    வேல்,    தெவ்,  யாழ்,   வாள்.

இதனால், எந்த வல்லின மெய்யும், மொழிக்கு இறுதியில் நிற்காது என்பதை உணர்க.
அசோக், கிரீச், பிசரட், பிரசாந்த், பிரதாப் என்பன போன்றவை தமிழாகா என்றறிக.
இவற்றைப் பலுக்கிப் பார்த்து இவை விலக்கப்பட்டமை ஏன் என்றும் உணர்க.

இடைநிலை


இடைநிலை என்றால் என்ன?
அதாவது, ஒரு சொல்லுக்குள், எந்தெந்த எழுத்துகளை அடுத்து எந்தெந்த எழுத்துகள் வரக்கூடாது என்பதே இடைநிலையாம். இதன் சில நெறிகளைக் காண்போம்.

இடைநிலை நெறி 1:

வல்லின மெய்க்குப் பின் வேறு எந்த மெய்யும் வராது வராது வராது. க் ச் ட் த் ப் ற் எனும் ஆறு மெய்யெழுத்துகள் வல்லின மெய்களாகும். இவற்றை அடுத்து எந்த மெய் எழுத்தும் வராது என்க... உயிர்மெய்களே வருமென்க.
பயிற்ச்சி, புரட்ச்சி
 என்பன போன்ற பிழைகளை இந்நெறியின் வழி திருத்திக் கொள்ளலாம்.

இடைநிலை நெறி 2:

கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும். அதாவது, க், ச், த், ப் எனும் மெய் எழுத்துகளின் பின் அம்மெய்கள் கொண்ட உயிர்மெய்கள் மட்டுமே வரும். பிற உயிரமெய்கள் வாரா.
எ-டு: அக்கை, உச்சி, மெத்தை, உப்பு...

இடைநிலை நெறி 3:

ர, ழ என்ற இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும். ரகர ழகர மெய்கள், ரகர ழகர உயிர்மெய்களோடு சேரா. பிற உயிர்மெய்களோடு மட்டுமே சேரும்.

எ-டு: கூர்மரம், வாழ்நிலம்...

ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். க, ச, த, ப, ர, ழ ஆகிய ஆறனைத் தவிர மற்ற மெய் எழுத்துகள் அதே மெய் கொண்ட உயிர்மெய்யோடு பிற உயிர்மெய்யோடும் வரும்.
எ-டு:
என்னை/என்று; அம்மா/அம்பு; என்பன போன்று.

இடைநிலை நெறி 4:

தனிக்குறிலை அடுத்து ரகர மெய்யும் ழகர மெய்யும் நிற்காது. நிற்காது என்று சொல்லப்பட்ட நெறியை மீறி நிற்பவை தமிழல்ல என்க.
எ-டு : அர்ச்சனை, கர்ப்பம் போன்ற பல வடமொழிகளை களைய இந்நெறி உதவும்.
மற்ற இடைநிலை நெறிகளைத், தக்க இலக்கண நூல்களுள் கண்டு கொள்க. நன்றி

முதனிலை

பன்னிரண்டு உயிரெழுத்துகளும், உயிரேறிய க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகளாகும். மற்றவை மொழிக்கு முதலில் வாரா...

எ-டு.

அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சான்று, ஞாயிறு, நன்மை, பூ, மணி, யாழ், வயல்.
எந்த மெய்யெழுத்திலும், எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
ங, ட, ண, ர,ல, ழ, ள, ற, ன 
என்ற வரிசை உயிர்மெய்களைக் கொண்டு, எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
இவைகளுள்ளே,

க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
  1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேள்வி, கை, கொண்டு, கோடை, கௌவை.
  2.  சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரை, செக்கு, சேவல், சைவம், சொன்றி, சோறு,
  3.  தகை, தார், திரை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேடல், தையல், தொண்டு, தோடு, தௌவை.
  4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌவி.
  5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
  6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேடு, மையல், மொட்டு, மோனை, மௌவல்.

வகரமெய்

 வகரமெய் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

யகரமெய் 

யகரமெய் ஆகாரத்தை கொண்டே பெரும்பாலும் முதலாகி வரும். 
யாழ், யாறு, யாது, யாக்கை, யானை.
ஆயினும் யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும் என்பது நன்னூல்.
 

ஞகரமெய்

ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.