Showing posts with label தூய்மை. Show all posts
Showing posts with label தூய்மை. Show all posts

Saturday, 26 November 2016

தூய்மை

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை. பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்றாலும் நம் கடமையையும் உணர்ந்து தமிழின் தூய்மையைப் பேணுவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.