Showing posts with label பழம்பாடல். Show all posts
Showing posts with label பழம்பாடல். Show all posts

Saturday, 26 November 2016

எண்மை (எளிமை)

எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.

தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை. (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான ஒலிகொண்ட சொற்கள், இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ட்சி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

தண்டலை மயில்க ளாடத்
தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட
மருதம்வீற் றிருக்கு மாதோ
                      - கம்பர்

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர். ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களேயன்றித் தனியெழுத்துக்களல்ல. வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார் என்க.

முன்மை

முன்மை என்றால் முதன்மையாக நிற்குந் தன்மை என்க.

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு. அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே. தமிழ் ஒன்றே.

அது மட்டுமின்றிப், பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்.

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே.
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
        - (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்.

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்.

தொன்மை


தமிழ் மொழி, உலக முதன் மொழியாகும். அது, உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.

தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததான 'புறப்பொரும் வெண்பா மாலை' எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் போது,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

குறிஞ்சி முல்லை வாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும், இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.

என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழந் தொன்மையும் விளக்குகின்றது.

அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த 
  1. ஏழ்தெங்க நாடும்,
  2. ஏழ்மதுரை நாடும்,
  3. ஏழ் முன்பாலை நாடும்,
  4. ஏழ் பின்பாலை நாடும்,
  5. ஏழ்குன்ற நாடும்,
  6. ஏழ்கண காரை நாடும்,
  7. ஏழ் குறும்பனை நாடும் 
 
என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமே என்றார் என்று உணர்க’

என்று 'தொடியோள் பௌவமும்' என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்குத் தெரிகின்றன.

இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

 
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழி கொண்ட கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...