Saturday, 26 November 2016

மாத்திரை

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று,
நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை ஒன்று;
உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரை என்பது எழுத்தை ஒலிக்கும் கால நேரத்தை வரையறை செய்யும் கருவியாகும்.
இயல்பாக, மேற்சொன்ன மாத்திரை அளவில் ஒலிக்கும் எழுத்துகள், பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், அராகத்திலும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் ஆக முப்பதே தமிழின் முதல் எழுத்துகள் என்று கண்டோம். இந்த முப்பது ஒலிகளை வைத்து மட்டுமே இயங்குவதே நம் தாய்மொழியான தமிழ் என்க.

எழுத்திலக்கணம்: இனவெழுத்துகள்

இன வெழுத்து என்றால் என்ன:
ஒரே இடத்திலும் ஒரே போன்ற முயற்சியாலும் பிறந்த எழுத்துகள், இனவெழுத்துகளாம்
அகரத்துக்கு ஆகாரமும்,
இகரத்துக்கு ஈகாரமும்,
ஒகரத்துக்கு ஓகாரமும்,
உகரத்துக்கு ஊகாரமும்,
எகரத்துக்கு ஏகாரமும்,
ஐகாரத்துக்கு இகரமும்,
ஒகரத்துக்கு ஓகாரமும்,
ஒளகாரத்துக்கு உகரமும்,
ககரத்துக்கு ஙகரமும்,
சகரத்துக்கு ஞகரமும்,
டகரத்துக்கு ணகரமும்,
தகரத்துக்கு நகரமும்,
பகரத்துக்கு மகரமும்,
றகரத்துக்கு னகரமும்,
இன வெழுத்துக்களாம்.

இடையெழுத்தாறும், ஓரினமாகும்.
ககரத்துக்கு ஙகரமும், (அங்கு, பொங்கு)
சகரத்துக்கு ஞகரமும், ( மஞ்சள், பிஞ்சு)
டகரத்துக்கு ணகரமும், (கண்ட, உண்ட)
தகரத்துக்கு நகரமும், (அந்த, இந்த)
பகரத்துக்கு மகரமும், (வம்பன், அம்பு)
றகரத்துக்கு னகரமும், (மன்றம், கொன்று)
இவற்றை அக்காள் தங்கை என்று நினைத்துக் கொள்க...

ன் - வருமா, ண் - வருமா, ந் - வருமா என்ற குழப்பங்கள் வரும்போது, அக்காள் தங்கை என்ற நினைவு பயன்படும்.
 

இளமைப்பெயர்கள்

பறவைகள்,ஊர்வன - பார்ப்பு, பிள்ளை
பறவைகள், நண்டு, மீன், தேள் - குஞ்சு
காக்கை, கிளி, கீரி - பிள்ளை
மூங்கா, வெருகு - குட்டி,பறழ்
அணில் - குட்டி, பறழ், பிள்ளை
எலி - குட்டி, குஞ்சு
பன்றி, புலி, முயல், நரி -குருளை, குட்டி, பறழ், பிள்ளை
நாய்- குருளை,குட்டி,பறழ்
ஆடு,குதிரை,நவ்வி,உழைபுல்வாய்,மான்,அழுங்கு - மறி
குரங்கு - குட்டி, மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு
ஆடு, குதிரை, மான் - குட்டி
யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம் - கன்று
யானை, ஆ, எருமை, கடமை,மரை, குரங்கு, முசு, ஊகம் - குழவி
யானை - கயந்தலை, களபம், கன்று
அரிமா, ஒநாய் - குருளை, குட்டி
மாந்தன் - குழவி, மகவு, பிள்ளை, சேய், குழந்தை, பாப்பா
ஆளி - ஆணங்கு
கரடி -குடாவடி, குட்டி
காசறை(கத்தூரிமான்) - கரு
நாவி(புனுகுபூனை) - பிள்ளை
உடும்பு, ஒணான், பாம்பு - குட்டி
மாடு, எருமை - கன்று
பூனை, வாவல்(வௌவால்) - குட்டி
பேன் - செள்
பயிர்கள், செடிகள் - நாற்று
மரங்கள் - கன்று
தென்னை - பிள்ளை

பொதுவாக, முட்டையிடுபவற்றின் இளமைப்பெயர் குஞ்சு என்பதும், நேரடியாக ஈனுபவற்றின் இளமைப்பெயர் குட்டி என்பது மாகும்.

எழுத்திலக்கணம்: உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகள்
தமிழ் உயிர்மெய் எழுத்துகள் பட்டியல்
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

எடுத்துக்காட்டு
கீழேயுள்ள அட்டவணையின் மெய்யெழுத்து "க்" உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய்யாகும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.

அமைப்பு உயிர்மெய் வடிவம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ

எழுத்திலக்கணம்: எழுத்துகள்

உயிரெழுத்துகள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துகளும் ஆகும். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----
உயிரெழுத்துகள், குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), என இரண்டு வகைப்படும்.
-----
குற்றெழுத்துகள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----
நெட்டெழுத்துகள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டு எழுத்துகளும் ஆகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----
வல்லெழுத்துகள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----
மெல்லெழுத்துகள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----
இடையெழுத்துகள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
----
உயிர் எழுத்துகளுக்கு 'உயிர்' என்றும் மெய் எழுத்துகளுக்கு 'மெய்' என்றும் 'உடம்பு' என்றும் தமிழர் பெயர் கொடுத்தது ஏன்?
உயிர் இனங்கள் அனைத்தும் உடல், உயிர் ஆகிய இரண்டையும் கொண்டு விளங்குகின்றன. உயிருள்ள உடலையும் உயிர் இல்லாத உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகின்றது.

இதனால்,
  1. உயிர்
  2. உடல்
  3. உயிரும் உடலும் இணைந்த உயிரினம்

ஆகிய மூன்றையும் நம்மால் தனித்தனியாகப் பிரித்து அறிய முடிகின்றது. இந்தப் பிரிவின்படி தமிழ் எழுத்துகள், உயிர், மெய் (உடல்), உயிர்மெய் என்று பிரிக்கப்பட்டு
  1. உயிர் எழுத்து
  2. மெய் எழுத்து
  3. உயிர்மெய் எழுத்து
என்று குறிக்கப்படும் பாங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது ஆகும்.
க், ங், ச், ஞ், என்ற உயிர்மெய்களை உயிர் எழுத்துகளின் உதவியின்றி சொல்லவே முடியாது.
க் என்பதை, 'இக்கு' என்று நாம் சொல்லும்போதும், இகர உயிரையும் உகர உயிரையும் சேர்த்தே பலுக்குவதைக் காண்க.

இதனால் இவை உடம்பு எனவும் மெய் எனவும் அழைக்கப்பட்டன.
உயிர் ஏறிய மெய்கள் உயிர்மெய்களாகும். உயிர்மெய் என்பது, பிராணி என்ற அயற்சொல்லால் அழிக்கப்படும் முன், அந்தப் பொருளில் வழங்கி வந்த ஒன்றே ஆகும்.
உயிர் மெய்யெழுத்துகளாவன. பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
  • உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு;
  • உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு;
  • ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
  • உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு,
  • உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு,
  • உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு,
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----
உயிர்மெய் என்பது உயிர் ஏறிய மெய் என்க...

க் + அ = க.
அ + க் = அக்

வியன்மை

உலகெங்கும் பரவியுள்ள தன்மை

பல தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன.
 எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.
கருத்தளவிலும், பற்பல தமிழ் இலக்கிய இலக்கண மெய்யியல் கருத்துகள் உலகெங்கும் பரவியுள்ளன. அகர முதல வெழுத்தெல்லாம் என்றது அனைத்து மொழிகளுக்குமாம்.இதுவரை, மொழிஞாயிறு பாவாணர் தொகுத்தளித்த, தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகளின் விளக்கங்கள் கண்டோம்.

இவற்றைத் தவிரவும் தமிழுக்கு ஒரு தனிப்பெருஞ் சிறப்பு உண்டு.
அது..
'தமிழ் நம் தாய்மொழி' என்பதாகும்.

எழுத்திலக்கண உறுப்புகள்

எழுத்திலக்கணத்து உறுப்புகளாவன பன்னிரண்டாம். அவை
  1. எண் (எழுத்துகளின் தொகை)
  2. பெயர் (வகை)
  3. முறை (வைப்பு முறை)
  4. பிறப்பு (எழுத்துகள் பிறக்கும் முறை)
  5. உருவம் (எழுத்துகளின் உருவம்)
  6. மாத்திரை (எழுத்துகளின் அளபு)
  7. முதனிலை (சொல்லின் முதலில் நிற்கும் எழுத்துகள்)
  8. ஈறுநிலை (சொல்லின் இறுதியில் நிற்கும் எழுத்துகள்)
  9. இடைநிலை (இந்த இந்த எழுத்தின் பின் இந்த இந்த எழுத்துகள் சொற்களின் இடையில் வருதல் பற்றியது)
  10. போலி (ஐ - அய்...)
  11. சொல்லுருவாக்கம் (எழுத்துகள் சொற்களாக உருவாகும் முறை)
  12. புணர்ச்சி (இரு எழுத்துகள் சேரும் போதான நிலை)
அனைத்து  உறுப்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.